தமிழ்நாடு செய்திகள்

ஆபாச சைகை செய்த காவலர் - புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு

Published On 2025-05-03 07:36 IST   |   Update On 2025-05-03 07:36:00 IST
  • காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் சென்றபோது, இவர்களின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், தேவையின்றி 'ஹாரன்' அடித்தும், அப்பெண்ணிடம் ஆபாச சைகையும் காட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஓட்டேரி காவல் நிலையம் அருகே அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த காவலர் தினேஷ் என்பது தெரியவந்தது. மேலும், மது போதையில் இருந்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பெண்ணை நோக்கி ஆபாச சைகை செய்த காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தன்னை தாக்கியதாக காவலர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் புகாரளித்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News