தடையை மீறி பா.ம.க.வினர் போராட்டம்- சவுமியா அன்புமணி கைது
- வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர்.
- அரசை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் பா.ம.க. மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினார்கள்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அருகே கடந்த 26-ந்தேதி அ.தி.மு.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கடந்த 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலை நகரங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கடந்த 26-ந்தேதி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பிறகு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கட்சி நிர்வாகிகள் கடந்த 31-ந்தேதி வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டனர். இதையடுத்து சீமான் உள்பட நிர்வாகிகள் 200 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து 4-வது கட்சியாக பா.ம.க. இன்று போராட்டம் நடத்தியது. பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ம.க.வினர் அறிவித்தனர். எனவே போராட்டம் நடத்த வரும் பா.ம.க.வினரை கைது செய்வதற்காக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 350-க்கும் மேற்பட்ட போலீ சார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே 10.45 மணி அளவில் சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க. மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்
என்றாலும், தடையை மீறி சவுமியா அன்புமணி உள்பட பா.ம.க. மகளிர் அணி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதையடுத்து சவுமியா அன்புமணி உள்பட பா.ம.க. மகளிர் அணியினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அரசை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் பா.ம.க. மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினார்கள்.