தமிழ்நாடு செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

Published On 2025-04-25 13:53 IST   |   Update On 2025-04-25 13:53:00 IST
  • கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
  • உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை:

கருணாநிதி தலைமையில் கடந்த 1996-2001 மற்றும் 2006-2011-ம் ஆண்டுகளில் நடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி வேல் முருகன் முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல் முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல் முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும் படி, கடலூர் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News