சென்னை உள்பட வட தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்
- சென்னையில் அதிகபட்சமாக துரைபாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
- தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் பரவலாக அதிகாலே முதலே மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக துரைபாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, மடிப்பாக்கத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பள்ளிக்கரணை, பாரீஸ், அடையார் பகுதிகளில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.