தமிழ்நாடு செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவர் பதவி நீக்கம்

Published On 2025-07-02 13:01 IST   |   Update On 2025-07-02 13:01:00 IST
  • சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
  • ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் ம.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4-ந் தேதி நடந்த நகர்மன்ற சேர்மன் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தலா 15 வாக்குகளை பெற்று சமநிலை வகித்தது. தொடர்ந்து தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மன் ஆக தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கண்ணன் என்ற ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நகராட்சியில் சேர்மன் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என கூறி சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் கமிஷனர் (பொறுப்பு) நாகராஜனிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று சேர்மன் உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். 30 கவுன்சிலர்களில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் சேர்மன் உமா மகேஸ்வரி சேர்மன் பதவி பறிபோனது.

தி.மு.க.வை சேர்ந்த சேர்மன் பதவி பறிபோன சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து நகராட்சி கமிஷனர் கூறுகையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்து உள்ளதால் சேர்மன் உமா மகேஸ்வரி பதவி இழந்தார் . இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதிய சேர்மன் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News