தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட ராணா- திகார் சிறையில் அடைக்க என்.ஐ.ஏ தீவிரம்

Published On 2025-04-10 17:23 IST   |   Update On 2025-04-10 17:23:00 IST
  • சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள்.
  • ராணா கைது செய்யப்பட்ட பின்னர் குண்டு துளைக்காத காரில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்.

இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லியும் ஒருவர்.

லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இவரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது

இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடி வந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்தது. ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவித்தார்.

தன்னை நாடு கடத்தக்கூடாது என தஹாவூர் ராணா அமெரிக்க கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது கடைசி கட்ட முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ராணாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக இந்திய சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்பின் அதிகாரிகள் அமெரிக்கா சென்றனர். அவர்களிடம் ராணாவை அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அவரை நாடு கடத்துவதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள். நேற்று இரவு 7.10 மணி அளவில் அந்த விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.

இந்தநிலையில், தஹாவூர் ராணா இந்தியா கொண்டு வரப்பட்டார். பின்னர், இதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) அதிகாரப்பூர்வமாக அவரை கைது செய்ய உள்தாக தகவல் வௌியாகியுள்ளது.

ராணா கைது செய்யப்பட்ட பின்னர் குண்டு துளைக்காத காரில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பயங்கரவாதி தஹாவூர் ராணா டெல்லி திகார் ஜெயிலில் உயர் பாதுகாப்பு வார்ட்டில் உள்ள அறையில் அடைக்கப்பட உள்ளார். 

Tags:    

Similar News