கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
- கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கிளாம்பாக்கத்திற்குசென்று வருவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது. கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் பாதுகாப்பு வசதிகள் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது. ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.
எனவே புதிய ரெயில் நிலைய பணிகள் முழுவதும் வருகிற ஜூன் மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். இதனால் பயணிகளின் போக்குவரத்து பிரச்சனை முழுமையாக தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.
தற்போது இது தீர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த பணியும் விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வரமுடியும்.