மற்ற கட்சிகள் கேட்பது போல் தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம் - முத்தரசன்
- தமிழக அரசியலில் பா.ஜ.க. தன்னை வளர்த்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
- தமிழக தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணியை நடத்துகிறது.
கோவை:
கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத் தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடியது போல் தொழிலாளர் போராட்டம் நடக்கும்.
தமிழக அரசியலில் பா.ஜ.க. தன்னை வளர்த்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அவர்களால் மதம் சார்ந்த கொள்கைகளை சொல்லி கட்சி வளர்க்க முடியவிலலை. அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை போல் இங்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் கடவுளின் பெயரால் பிரச்சனை செய்து அரசியல் நடத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை அரசியல் ஆக்கி வருகின்றனர். கலவரத்தை உருவாக்கி பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது.
இதே பிரச்சனை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வந்தபோது அதை அவர் நிராகரித்தார். இதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பும் வந்தது. ஆனால் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்ற சொன்ன அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி இதை ஆதரிக்கிறார். பா.ஜ.க. என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டும் நிலையில் இருக்கிறார்.
தி.மு.க. உடனான இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவானதாகும். தொகுதி உடன்பாடு அடிப்படையில் உருவானதல்ல. அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கூட்டணி தொடர்கிறது.
இந்த தேர்தலில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும்போது, நாங்களும் கூடுதல் தொகுதிகளை கேட்போம். எத்தனை என்பது பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணியை நடத்துகிறது. அதனால் தமிழகத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.