தமிழ்நாடு செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்வு- முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2025-11-22 12:18 IST   |   Update On 2025-11-22 12:18:00 IST
  • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
  • அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தால் அதற்கு மேல் தேங்கும் நீர் கேரள பகுதிக்கு உபரியாக திறந்து விட வாய்ப்பு உள்ளது.

கூடலூர்:

152 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால் கேரள அரசு தன்னார்வ அமைப்பினர் மூலம் ரூல்கர்வ் விதிமுறைப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அந்த விதிப்படியே தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தேக்கிக்கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் கூடுதல் நீர்வரத்து ஏற்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேங்கும் தண்ணீர் கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு திறந்து விடப்படுகிறது.

இதன்படி கடந்த மாதம் 10 நாட்களுக்கு மேலாக ரூல்கர்வ் விதிப்படி 138 அடிக்கு மேல் அணைக்கு வந்த நீரை உபரி நீராக கருதி இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைந்த நிலையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.

முல்லைப்பெரியாற்றின் கரையோரப்பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. எனவே கரைப்பகுதிகளை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையோரப் பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் அணையில் இருந்து தண்ணீரை முற்றிலும் வெளியேற்றாமல் நிறுத்தியதாலும் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. இதனால் இடுக்கி மாவட்ட கரையோரப்பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.20 அடியாக உள்ளது. நீர்வரத்து 1313 கன அடி. தண்ணீர் திறப்பு இல்லாத நிலையில் நீர் இருப்பு 6168 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தால் அதற்கு மேல் தேங்கும் நீர் கேரள பகுதிக்கு உபரியாக திறந்து விட வாய்ப்பு உள்ளது.

பருவமழை காலங்களில் அணைக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் உபரியாக திறந்து விடுவதால் 5 மாவட்ட விவசாயிகள் கோடை காலங்களில் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு ரூல்கர்வ் நடைமுறையை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News