மீண்டும் வேகமாக உயரும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்பாகவே தொடங்கி பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்தது.
ஆனால் ரூல் கர்வ் முறைப்படி அதற்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது என்பதால் உபரி நீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த 1 வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தால் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து 2131 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4001 கன அடியாக அதிகரித்தது.
இன்று காலை மேலும் நீர்வரத்து உயர்ந்து 4574 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று நீர்மட்டம் 130.90 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 131.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ரூல் கர்வ் விதிப்படி ஜூலை 31 வரை அணயில் 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம். தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் முழு அளவில் இயக்கப்பட்டு 168 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 1837 கன அடி. நீர் திறப்பு 869 கன அடி. இருப்பு 4738 மி.கன அடியாக உள்ளது. 66 கன அடியை எட்டியதும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் அணையின் நீர்மட்டத்தை நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.