தமிழ்நாடு செய்திகள்

கொலோன் பல்கலைக்கழகம் வழங்கிய பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்திற்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Published On 2025-09-10 13:53 IST   |   Update On 2025-09-10 13:53:00 IST
  • தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
  • கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, ஜெர்மனி நாட்டின், கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், (ஓய்வு), இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரிடம் வழங்கினார்.

பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரத்திற்கும் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் உடனடியாக கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 7.7.2021 அன்று உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News