தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

Published On 2025-07-22 12:08 IST   |   Update On 2025-07-22 14:07:00 IST
  • தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது.
  • அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பா.ஜ.க.வின் கனவு.

அரியலூர்:

போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வதந்தியை நாங்கள் மறுத்து வருகிறோம். பஸ் கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் தற்போதைக்கு இல்லை.

இப்பொழுதும் அதையே உறுதிப்படுத்துகிறோம். சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

பஸ் கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்ற நிலையில் போக்குவரத்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே பஸ் கட்டண உயர்வு என்பது நிச்சயம் இருக்காது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பா.ஜ.க.வின் கனவு. எனவே தி.மு.க.வின் வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு புதிய கட்சிகளை பா.ஜ.க. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் களத்தில் இறக்குவது வழக்கம். இப்பொழுதும் அந்த தந்திரத்தை புதுப்புது முயற்சிகளில் எடுத்துள்ளது. அனைத்தையும் முறியடித்து முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. வெற்றி பெறும்.

எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு முறையும் ஒன்றை பேசுவார். ஆனால் நடைமுறைக்கு வரும் பொழுது வேறு விதமாக இருக்கும். 2036 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்க இவர் வாய் கட்டி, வாய்மூடி மவுனியாக அமர்ந்திருந்தார். இப்பொழுது ஒன்றை பேசுகிறார். இன்னும் சில காலம் கழித்து என்ன பேசுவார் என்று காலம் நமக்கு உணர்த்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

Similar News