புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதில் தடை ஏதும் இருக்காது- அமைச்சர் தகவல்
- எதிர்கட்சி தலைவர் நின்று கொண்டிருக்கின்ற அரசியல் தளம் அப்படிப்பட்டது.
- பாதிப்பு இருந்தால் உண்மையாக எங்கெல்லாம் அபயக் குரல் கேட்கின்றதோ, அங்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டுபவர் எங்களுடைய முதலமைச்சர்.
சென்னை:
சென்னை, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்டு, நடைபெற்று வரும் 700 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தங்கசாலை மேம்பாலம் அருகில் நடைபெற்று வரும் 776 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் கடந்த 14.03.2024 அன்று சென்னை, தங்க சாலையில் ரூபாய் 2,097 கோடி மதிப்பீட்டிலான 87 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இத்திட்டமானது பல்வேறு துறைகளின் சார்பில் விரிவடைந்து தற்போது ரூபாய் 6,309 கோடி மதிப்பீட்டில் 252 திட்டங்களாக அதிகரித்து உள்ளது.
முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டப் பணிகள் அனைத்தையும் நேரடியாக களத்திற்கு சென்று, அனைத்து பணிகளையும் முடக்கி விடுகின்ற சூழலை உருவாக்கிக் கொண்டு, தினந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டங்கள் என்பது ஒட்டுமொத்தமாக 252 திட்டங்கள் என்றாலும் இந்த 252 திட்டங்களில் பெரும்பாலான திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு டிசம்பர் 2025 இறுதிக்குள் கொண்டு வருவதற்கு உண்டான அனைத்து பணிகளும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பெருநகர சென்னை மாநக ராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் போன்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த திட்டப்பணிகளை விரைவுப்படுத்துகின்ற முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
எதிர்கட்சி தலைவர் நின்று கொண்டிருக்கின்ற அரசியல் தளம் அப்படிப்பட்டது. அவர் குறைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அவர் சொல்லுகின்ற குறைகள் உண்மை இருப்பின் முதலமைமைச்சர் குறைகள் யாரிடம் வருகிறது என்பது பேச்சு முக்கியமில்ல, பாதிப்பு இருந்தால் உண்மையாக எங்கெல்லாம் அபயக் குரல் கேட்கின்றதோ, அங்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டுபவர் எங்களுடைய முதலமைச்சர். ஃபெஞ்சல் புயலின் பாதிப்புக்கு ஏற்றார் போல் நிச்சயம் முதலமைச்சர் ஒன்றிய அரசு வஞ்சித்தாலும் நிவாரண நிதி வழங்குவதில் தடை ஏதும் இருக்காது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முதலமைச்சர் எடுப்பார். நிச்சயம் எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசு தான் இந்த அரசு.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.