தமிழ்நாடு செய்திகள்

மாஞ்சோலை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்- அமைச்சர்

Published On 2024-12-12 13:09 IST   |   Update On 2024-12-12 13:09:00 IST
  • மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன்.
  • நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.

நெல்லை:

நெல்லைக்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று இரவு நெல்லை வந்தார்.

தொடர்ந்து இன்று காலை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு அவர்களுக்கு பல்வேறு உறுதியினை அளித்தார்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தற்போது மாஞ்சோலை மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வந்திருக்கிறோம். தமிழக அரசு மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மக்களுக்கான 11 வகையான சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே 4 குடும்பத்தினருக்கு வீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள சிலருக்கு நெல்லை மாநகர பகுதியில் ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு கொடுக்கிறோம்.

மக்கள் கேட்கும் இடத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டும் இல்லாமல் இங்கு உள்ள மக்கள் அனைவரும் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் சமத்துவபுரம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தனியார் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து கூடுதல் நிதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வரும்போது அதற்கென ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன். மாஞ்சோலை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து உதவியும் செய்யப்படும். மேலும் ஒரு சில மக்கள் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்துள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகன்யா, உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கி பாண்டி, யூனியன் சேர்மன் பரணி சேகர், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.

Tags:    

Similar News