மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை எட்டியது
- கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
- தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கியது. இதன் காரணமாக கடலோர மற்றும் மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பல்வேறு ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 6 ஆயிரத்து 234 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் தான் அணையின் நீர்மட்டம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத முதல் வாரத்திலேயே 113 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.