தமிழ்நாடு செய்திகள்

சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

Published On 2024-12-03 13:04 IST   |   Update On 2024-12-03 13:54:00 IST
  • விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன.
  • அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

சினிமா விமர்சனங்கள் என்பது தற்போது ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது. படத்தின் முதல் ஷோ பார்த்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களை பார்த்த பின்னர் படத்துக்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இதனால் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன.

சமீபத்தில் கூட இந்தியன் 2, கங்குவா போன்ற படங்கள் படுதோல்வி அடைந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அதிலும் கங்குவா படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

சமூக வலைதளங்களில் அதிக அளவில் விமர்சனங்கள் வந்ததால் அப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த சினிமா விமர்சனங்களை தடை செய்யக்கோரி திரைத்துறையினர் சார்பிலும் தயாரிப்பாளர்கள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

சினிமா விமர்சனங்களை வெளியிட தடை கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதில் படம் வெளியாகி முதல் 3 நாட்களுக்கு எந்தவித விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி எஸ்.சவுந்தர்,

விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க இயலாது. அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனங்கள் பதில் அளிக்க ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News