தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய உள்ளூர் மக்கள்

Published On 2025-06-17 12:28 IST   |   Update On 2025-06-17 12:28:00 IST
  • உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம்:

உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வழி காலம் காலமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பக்தர்கள் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இணை ஆணையராக செல்லத்துரை பொறுப்பேற்ற நிலையில் உள்ளூர் பக்தர்கள் வழக்கமாக செல்லும் தரிசன வழித்தடத்திற்கு தடை விதித்தார். மேலும் மற்ற பக்தர்களை போல் கட்டண வழித்தடம் அல்லது பொது தரிசனம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ராமேசுவரத்தில் உள்ளூர் பக்தர்கள் வழிபாட்டு உரிமையை காக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.

இந்த நிலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் கட்டண தரிசனம் வழியில் உள்ளூர் மக்கள் வர வேண்டும் என பிடிவாதமாக கூறிவிட்டது.

கோவில் நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து இன்று கோவிலில் நுழைவு போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக கோவில் நுழைவுவாயிலில் இன்று காலை தடுப்புகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணியளவில் கோவில் முன்பு உள்ளூர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டவாறு தடுப்புகளை தாண்டி கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு போலீசார் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.

இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நுழைவு போராட்டம் காரணமாக மேலவாசல் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 

Tags:    

Similar News