சிங்காரப்பேட்டையில் பெருமாள் கோவில் மலையில் மண் சரிவு
- சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது.
- சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 செ.மீ. அளவில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி தண்ணீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர் கனமழை காரணமாக ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பின. மேலும், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களும் மூழ்கின.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண் சரிவு அதிக மழை பெய்த காரணத்தினால் ஏற்பட்டதா? அல்லது மண்ணின் உறுதித் தன்மை குறைந்ததால் ஏற்பட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.