60 ஆண்டு ஆக்கிரமிப்பில் இருந்த பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்பு
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.
பழனி:
தமிழ் கடவுள் முருகன் பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தமிழகத்தில் அதிக அளவு பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக உள்ளது. மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்மிக பெரியவர்கள் பலரும் பழனி கோவிலுக்கு பல்வேறு சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர்.
இவற்றில் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பழனி பூங்கா ரோடு பகுதியில் கோவிலுடன் இணைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது அந்த நிலத்திற்கு பழனி கோவில் ஆணையரை தக்காராக நியமனம்செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்டபாணி மடத்தின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மடத்தை மீட்டனர்.
தொடர்ந்து நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டது பக்கதர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.