கரூர் ஆய்வுக்கு சென்றபோது விபத்தில் சிக்கிய பா.ஜ.க கூட்டணி எம்.பிக்கள் குழு
- கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.
- ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது.
கோவை:
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமமாலினி எம்.பி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் இன்று காலை கோவைக்கு விமானத்தில் வந்தனர். பிறகு அவர்கள் 10 காரில் கோவையில் இருந்து கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.
ஒரு காரில் ஹேமமாலினி எம்.பி அனுராக் தாக்கூர் எம்.பி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.
கோவை அருகே கே.ஜி.புதூர் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீர் என பிரேக் பிடித்ததால் மற்ற கார்களும் அடுத்தடுத்து நிற்கத் தொடங்கின. அப்போது ஹேமமாலினி இருந்த காரின் பின்னால் ஒரு கார் லேசாக மோதியது.
இதில் ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது. இதனால் காரின் இரண்டு புறமும் சிறிது சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் அனைவரும் மாற்று கார் ஏற்பாடு செய்து கரூர் புறப்பட்டு சென்றனர்.