கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 430 பேர் ஆஜர்
- போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
- சம்பவம் குறித்து நீதிபதி விசாரணை நடத்தி இந்த வழக்கை மீண்டும் ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது அவர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இந்த கல் வீச்சில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் நாற்காலிகள், பள்ளி பஸ்கள், போலீஸ் வாகனம், தடுப்புகளுக்கு தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்த கலவர சம்பவம் குறித்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்திரவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்திற்கு 430 பேர் வருகை தந்தனர். இதில் 20 பேராக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நீதிபதி விசாரணை நடத்தி இந்த வழக்கை மீண்டும் ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.