தி.மு.க. அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்தலாம் என மத்திய அரசு நினைக்கிறது- கனிமொழி
- தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
- மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை தாக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு விழாவில் பங்கேற்ற பின்பு தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. அரசு ஒரு புறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் அவர்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சோதனை. தி.மு.க. இதை எதிர்கொள்ளும். நமது அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து தி.மு.க.வுடன் உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலாலும் தி.மு.க. தலைவர்களை அச்சுறுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.