தமிழ்நாடு செய்திகள்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

Published On 2025-11-26 08:32 IST   |   Update On 2025-11-26 08:32:00 IST
  • அடுத்த மாதம் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
  • 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.

சென்னை:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த 18-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த கூட்டத்தின் முடிவில், அடுத்தகட்ட போராட்டமாக அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News