ஐடி ஊழியர் ஆணவ கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
- அரசு சார்பில் இழப்பீடாக அதிகாரிகள் கொடுத்த ரூ.6 லட்சத்தையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலையில் சுர்ஜித்தின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி நேற்று 2-வது நாளாக உறவினர்கள், குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் கவினின் குடும்பத்தினரிடம் நேற்று அரசு சார்பில் இழப்பீடாக அதிகாரிகள் கொடுத்த ரூ.6 லட்சத்தையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். போலீஸ் தம்பதியை கைது செய்ய வேண்டும். அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, இன்று 3-வது நாளாக கவின்குமாரின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்துள்ளனர்.