தமிழ்நாடு செய்திகள்

கைதான முன்னாள் அமைச்சரின் டிரைவர் சுரேஷ்.

ஐ.டி. நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.42 லட்சம் கொள்ளை - முன்னாள் அமைச்சரின் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

Published On 2025-07-03 09:16 IST   |   Update On 2025-07-03 09:16:00 IST
  • தந்தை வீட்டில் தங்கிவிட்டு கடந்த 21-ந் தேதி காலை மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
  • பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகார்ஜூன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்.

மதுரை:

மதுரை புதுவிளாங்குடி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கதிர்வேல். இவருடைய மகன் ஜெயேந்திரன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதால் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக இங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

இவர் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள தனத குடும்பத்தினருடன் கடந்த 17-ந் தேதி சென்றுள்ளார். அங்கு தந்தை வீட்டில் தங்கிவிட்டு கடந்த 21-ந் தேதி காலை மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அறையில் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் சமீபத்தில் அவரது சொத்துகளை விற்று வைத்திருந்த ரூ.42 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது. அந்த பணம் அவரது மகனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஜெயேந்திரன், செல்லூரில் உள்ள தன் நண்பர் உபேந்திரனிடம் தெரிவித்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசில் புகார் அளித்தார். கொள்ளை நடந்த இடம் கூடல்புதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வருவதால் அங்கு விசாரணை நடத்தப்பட்டது.

கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்தார். அதில் ஜெயேந்திரன் வீட்டில் பணம் இருந்ததை அறிந்த சிலர்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் ஒரு மர்ம கார் சென்றதை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கார் பற்றி விசாரித்தபோது ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய முக்கிய நபர்களான மதுரை கே.கே.நகரை சேர்ந்த பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த விவேகானந்த் (34), திருப்பாலையை சேர்ந்த யோகேஷ் (36), பொதும்பை சேர்ந்த சுரேஷ் (49) ஆகிய 4 பேரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து பல லட்ச ரூபாயை போலீசார் மீட்டனர்.

மேலும் பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகார்ஜூன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்.

இந்த வழக்கில் பணத்தை பறிகொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமி என்றும், அந்த வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளை போனதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் போலீசில் பல லட்சம்தான் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தவிர கைது செய்யப்பட்டவரில் சுரேஷ் என்பவர், அந்த முன்னாள் அமைச்சரிடம் ஏற்கனவே டிரைவராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.

Tags:    

Similar News