16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்ஸ்டாகிராமில் கடும் கட்டுப்பாடுகள்
- பெற்றோரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்க முடியாது.
- இன்ஸ்டாகிராம் பார்க்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிப்பது எளிதாக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக பதின்ம வயது குழந்தைகளும் கணக்கு தொடங்கி நிர்வகிப்பது அதிகரித்து வருகிறது. இதையடுத்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் தற்போது இந்த புதுப்பிப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் சில முக்கியமான அம்சங்களை அணுகுவதற்கு இனி பெற்றோரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இனி நேரலை ஒளிபரப்புகளை தொடங்க முடியாது.
அதுமட்டுமின்றி, நேரடியாக வரும் தகவல்களில் இடம்பெற்றிருக்கும் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்கவும் அவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவைப்படும்.
பெற்றோரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்க முடியாது. இதன்மூலம் அவர்கள் ஆபாச படங்களை பார்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
சமீப காலமாக சமூக ஊடகங்களின் தாக்கம் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் கவலைகளை குறைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மெட்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் பதின்ம வயதினர் கணக்குகள் தொடங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் உலக அளவில் சுமார் 5.4 கோடி பேர், பதின்ம வயதினருக்கான கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இன்ஸ்டாகிராம் பார்க்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிப்பது எளிதாக்கப்பட்டு உள்ளது.
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் முதல்கட்டமாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
குழந்தைகளுக்காக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த பாதுகாப்பு அம்சங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இதில் பதின்ம வயது கணக்குகளை இயல்பாகவே தனிப்பட்டதாக அமைத்தல், வெளி நபர்களிடம் இருந்து வரும் தனிப்பட்ட தகவல்களை தடுத்தல், வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், 60 நிமிடங்களுக்கு பிறகு செயலியை விட்டு வெளியேறுவதற்கான நினைவூட்டல்கள் மற்றும் தூங்கும் நேரத்தில் தானாக வரும் அறிவிப்புகளை நிறுத்துதல் ஆகியவையும் அடங்கும்.
இந்த பதின்ம வயதினர் கணக்குகளுக்கான கட்டுப்பாடுகள் விரைவில் முகநூல் மற்றும் மெசஞ்சர் போன்ற மற்ற மெட்டா தளங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.