தமிழ்நாடு செய்திகள்

மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசி செல்பவர்களுக்கு உடனடி அபராதம்- பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தல்

Published On 2025-01-21 08:19 IST   |   Update On 2025-01-21 08:19:00 IST
  • மெரினா கடற்கரையில் ஏராளமான குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் குப்பைகளை வீசி செல்கின்றனர்.

சென்னை:

கடந்த 16-ந் தேதி காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.

இதனால், மெரினா கடற்கரையில் ஏராளமான குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

அப்போது தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, மெரினா கடற்கரையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பது போன்று தனது செல்போனுக்கு வந்த இரு புகைப்படங்களை சுட்டிக்காட்டி, காணும் பொங்கல் பண்டிகையின் போது மெரினா கடற்கரை குப்பை கூளமாக காட்சி அளித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

கடற்கரையை எப்படி பாதுகாப்பது? என மக்களுக்கு தெரியவில்லை என வேதனை அடைந்த நீதிபதி, காணும் பொங்கலுக்கு விடுமுறை அளிப்பதால் தானே இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர் என கடுமையாக சாடினார்.

இதன்பின்பு, காணும் பொங்கல் தினத்தன்று விடுமுறை அளிக்கக்கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.சண்முகநாதன், 'குப்பைகளை வீசி செல்வதை குற்றமாக கருதி அபராதம் விதிக்காவிட்டால் இதை தடுக்க முடியாது.

படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் குப்பைகளை வீசி செல்கின்றனர்' என்றார்.

இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசி செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் தினங்களில் சிறப்பு படைகளை அமைக்க அரசு வக்கீலுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

மேலும், இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டது.

Tags:    

Similar News