3 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
- சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும்.
- வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.