தமிழ்நாடு செய்திகள்

உயிரிழந்த நாகராஜ் - ஆனந்தி

பாலப்பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்திற்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கணவன்-மனைவி உயிரிழப்பு

Published On 2025-05-04 12:10 IST   |   Update On 2025-05-04 12:10:00 IST
  • அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது.
  • ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சேர்வக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44), விவசாயி. இவரது மனைவி ஆனந்தி (42). இவர்களது மகள் ப்ரீத்தா(13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் 3 பேரும் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு தாராபுரம் திரும்பினர். அங்கு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு 3 பேரும் சேர்வக்காரன் பாளையத்திற்கு புறப்பட்டனர்.

தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக சாலையோரம் 10 அடியில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாததால் நாகராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இரவு நேரம் என்பதால் அவர்கள் பள்ளத்திற்குள் விழுந்து கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை. பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறியதில் நாகராஜ், ஆனந்தி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அவரது சத்தம் கேட்டு பள்ளத்திற்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது 3 பேரும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். உடனே இது குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன், ப்ரீத்தாவை மீட்டு சிகிச்சைக்காக தாரா புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜ், ஆனந்தி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாலப்பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தை சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதற்குள் விழுந்து 2 பேரும் பலியாகி உள்ளனர். பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது போல் திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. மேலும் விபத்துக்களும் நிகழ்ந்துள்ளது. எனவே இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தேவையான பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துக்குக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News