பலியான சண்முகம்பிள்ளை, மகராசி.
செங்கோட்டை அருகே விஷ வண்டு கடித்து கணவன், மனைவி பலி
- வண்டுகள் அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில் அந்த வழியாக சென்ற 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.
- மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் விஷ வண்டு (கடந்தை குளவி) கூடு இருந்த நிலையில், அந்த கூடு திடீரென கலைந்து அதில் இருந்து வண்டுகள் அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில் அந்த வழியாக சென்ற 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகம் பிள்ளை (வயது 85) மற்றும் அவரது மனைவி மகராசி(78) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டு கூட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.