நீர்வரத்து உயர்ந்து வரும் பிளவக்கல் பெரியாறு அணையை காணலாம்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை - ஒரே நாளில் 6 அடி நீர் மட்டம் உயர்ந்த பிளவக்கல் அணை
- வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
- பிளவக்கல் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு, கோவிலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வத்திராயிருப்பு:
வடக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதி கன மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அந்த வகையில் வத்திராயிருப்பை அடுத்த பிளவக்கல் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு, கோவிலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. 47.56 அடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் நேற்று வரை 18 அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் இருந்தது.
நேற்று பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயர்ந்து தற்போது 24 அடி தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 212 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அந்த பகுதியில் மட்டும் நேற்று 26 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
இதேபோல் கோவிலாறு அணை பகுதியில் 37.8 மி.மீட்டரும், வத்திராயிருப்பில் 12 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.