தமிழ்நாடு செய்திகள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தபோது எடுத்த படம்.

கோவை, நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை- சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2025-07-26 10:21 IST   |   Update On 2025-07-26 10:21:00 IST
  • கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

கோவை:

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வந்தன.

வால்பாறை தேயிலை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தலையில் பிளாஸ்டிக் கவர்களை போட்டுக்கொண்டு வேலை பார்த்தனர். மேலும் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் குடைகளுடன் வீடு திரும்பியதை பார்க்க முடிந்தது.

வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில், ஜே.ஜே. நகர் பகுதியில் நேற்று சாலையோரம் நின்றமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டும் மழையிலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

கிணத்துக்கடவு பகுதியிலும் நேற்று காலை முதல் மதியம் வரை அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. பின்னர் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.

இதன்காரணமாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பள்ளி குழந்தைகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வடிகாலில் மழைநீர் செல்லாமல் மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்கு மற்றும் திசை விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை சிரமத்துடன் இயக்கி வந்தனர்.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News