தமிழ்நாடு செய்திகள்

இன்று ஆடிக்கிருத்திகை: பழனி முருகன் கோவிலில் காவடியுடன் குவிந்த பக்தர்கள்

Published On 2025-08-16 11:49 IST   |   Update On 2025-08-16 11:49:00 IST
  • மலைக்கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.
  • தொடர் விடுமுறை காரணமாகவும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பாக சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி இன்று ஆடிக்கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி மலைக்கோவிலுக்கு வரத் தொடங்கினர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல இயக்கப்படும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது.

மேலும் படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர். மலைக்கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். பல்வேறு காவடிகளை எடுத்து வந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர் விடுமுறை காரணமாகவும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவிலில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுத்ததுடன் ஆங்காங்கு பிரசாதங்கள், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News