தமிழ்நாடு செய்திகள்

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த விதித்த தடை நீக்கம்- மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2025-04-04 13:25 IST   |   Update On 2025-04-04 13:25:00 IST
  • கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.
  • குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம்.

மதுரை:

தென்காசி ரெயில் நகரை சேர்ந்த நம்பிராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதற்காக புண்ணிய தலமான காசியில் இருந்து புனித நீர் வரவழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல்துறை மேற் பார்வையில் இந்த கோவில் உள்ளது.

இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.

கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே வருகிற 7-ந்தேதி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமிக்க வேண்டும். அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட், புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர், ஐ.ஐ.டி. குழுவி னரை நியமித்தும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கம் செய்ய வேண்டும் என வாதாடினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News