விசாரணையில் காவலாளி மரணம் - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
- குற்றம் புரிவோரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டத்திற்குட்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை.
- காவல் நிலையத்திற்கு உள்ளேயும், காவல் நிலையத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலை தமிழ் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குற்றம் புரிவோரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டத்திற்குட்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை. அதே சமயத்தில் விசாரணை என்ற போர்வையில் உயிரிழக்கும் அளவுக்கு கொடூரத் தாக்குதல் நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்கு உரியது. காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இனி மரணங்கள் ஏற்படாது என்று 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 25 மரணங்கள் ஏற்பட்டுவிட்ட நிலையில், தற்போது அஜித் குமார் உயிரிழந்து இருக்கிறார். இதுபோன்ற தொடர் மரணங்களைப் பார்க்கும்போது காவல் துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காவல் நிலையத்திற்கு உள்ளேயும், காவல் நிலையத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலை தமிழ் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.