வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் ஜி.பி.முத்து புகார்
- தெரு முழுவதும் பல்வேறு தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
- பொதுப்பாதையும் அடைக்கப்பட்டுவிட்டது.
தூத்துக்குடி:
சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வட்டார மொழியில் பேசும் அவரது பேச்சு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது ஊரான உடன்குடி காலன்குடியிருப்பு பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெரு இருந்தது. இந்த பகுதியில் அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் கீழத்தெரு காணாமல் போய்விட்டது.
அந்த தெரு முழுவதும் பல்வேறு தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பாதையும் அடைக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த பகுதியில் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கீழத்தெருவை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.