தமிழ்நாடு செய்திகள்

அறுபடை வீடு தரிசனத்திற்கு கட்டணமில்லா பயணம் - ஜூலையில் விண்ணப்பிக்கலாம்

Published On 2025-06-13 08:50 IST   |   Update On 2025-06-13 08:50:00 IST
  • 1000 பக்தர்களை 5 கட்டமாக அறுபடை வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அழைத்து செல்கிறது.
  • இந்த ஆண்டு அறுபடை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றிற்கு ஒவ்வொரு ஆண்டும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை தரிசனத்திற்காக கட்டணமில்லாமல் இந்து சமய அறநிலையத்துறை அழைத்து செல்கிறது.

1000 பக்தர்களை 5 கட்டமாக அறுபடை வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அழைத்து செல்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், 200 பக்தர்கள் இந்த கட்டணமில்லா பயண தரிசனத்திற்கு செல்லப்படுவார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பயணம் மேற்கொண்ட பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பயண பை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அறுபடை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் பக்தர்களின் பயண தேவைக்கான அடிப்படை தேவைகள் இந்த நிதியில் நிவர்த்தி செய்யப்படும்.

இந்த ஆண்டிற்கான முதற்கட்ட அறுபடை தரிசன பயணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அந்த இணையதளத்திலேயே கட்டணமில்லா அறுபடை தரிசனத்திற்கு செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு கட்டத்திலும் 400 பக்தர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக அவர்கள் 60 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.

அறுபடை தரிசனத்தை தொடர்ந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் தரிசன பயணமும் தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

Tags:    

Similar News