சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி
- எனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
- மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு வழி பாதையை ஏற்படுத்தி கொடுத்து நிலத்தில் விவசாயம் செய்ய உதவ வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஆடையூர் கிராம பகுதியை சேர்ந்த குமார் (45). இவரது மனைவி சாந்தி மற்றும் குமாரின் தந்தை மாணிக்கம் (70), தாய் ஸ்ரீரங்காயி (65) ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து ஊற்றி 4 பேரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். தீப்பெட்டி எடுத்து பற்ற வைக்க முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 4 பேரிடமும் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமார் கூறியதாவது:-
எங்களுக்கு சொந்த ஊரில் 1ஏக்கர் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் எங்கள் நிலத்திற்கு அருகாமையில் 1.48 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த வழியாக எங்கள் நிலத்திற்கும் மற்றும் வெளியே செல்வதற்கும் வழித்தடமாக கடந்த 60 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்தோம்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இந்த வழியாக செல்லக்கூடாது, விவசாயம் செய்யக்கூடாது எனக்கூறி மிரட்டல் விடுத்தனர்.
மேலும் எனது தாயையும் பயங்கரமாக தாக்கினர். இதில் எனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தோம் இதுவரை நடவடிக்கை இல்லை.
எங்களால் வெளியே செல்வதற்கு வழியில்லாமலும், விவசாயம் செய்வதற்கும் வழி இன்றி தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு வழி பாதையை ஏற்படுத்தி கொடுத்து நிலத்தில் விவசாயம் செய்ய உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.