தமிழ்நாடு செய்திகள்

சதுரகிரி மலைப்பகுதியில் பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

Published On 2025-07-29 12:06 IST   |   Update On 2025-07-29 12:06:00 IST
  • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி வத்திராயிருப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. உடனே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு காட்டுத்தீ பரவாமல் தடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக சதுரகிரிக்கு செல்லும் பாதையில் உள்ள கள்ளிச்சுனை என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மரங்களுக்கு தீ பரவியது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப் பட்டன.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறண்ட சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவி கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள மணிக்கட்டி என்ற இடத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த தீயில் மூலிகை மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

Tags:    

Similar News