தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. கொடி வண்ணம் தீட்டிய படகுகளுக்கு எரிபொருள் மானியம் மறுப்பு!- மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

Published On 2025-07-10 11:52 IST   |   Update On 2025-07-10 11:57:00 IST
  • த.வெ.க. கட்சியை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
  • படகுகளில் உள்ள பெயர்களை நீக்கினால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்ற அரசின் நிபந்தனை நியாயமற்றது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளி கிராமத்தில் வசிக்கும் சந்தியா, சூசை, சூடி, பெலிக்கான், திபூர்சியான், தீபன், தீபகு ரூஸ், டெலஸ், ரூபன் மற்றும் அஜித் ஆகிய 10 மீனவர்கள் சொந்தமாக படகுகள் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த படகுகள் தமிழக வெற்றிக் கழக கொடி வண்ணத்தில் இருந்ததை அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துறையின் உத்தரவின் பேரில், இந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு இந்த மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 250 லிட்டர் மானிய எரிபொருளை  அதிகாரிகள் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவர்கள் நலத்துறை அலுவலகத்தில் மீனவர்கள் முறையிட்ட போது, குறிப்பிட்ட கட்சியின் சார்பில் படகுகள் காட்சியளிப்பதால் அதனை மாற்றி அமைக்குமாறும், அவ்வாறு மாற்ற இயலாதபோது அரசின் மானிய சலுகைகளை பெற முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாக மீனவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள த.வெ.க. கட்சியை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இச்சம்பவம் கூட்டப்புளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்கள் கூறுகையில், படகுகளில் உள்ள பெயர்களை நீக்கினால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்ற அரசின் நிபந்தனை நியாயமற்றது. பல கட்சிகளின் வண்ணங்களில் படகுகள் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர்களை மட்டும் நீக்க சொல்வது பாரபட்சமானது.

அரசு இது போன்ற நிபந்தனைகளை விதித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடாது. எரிபொருள் மானியம் வழங்குவது அரசின் கடமை. அதை அரசியல் உள் நோக்கத்துடன் மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற்று, மீனவர்களுக்கு உரிய எரிபொருள் மானியம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News