தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் அருகே பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து

Published On 2025-02-05 14:17 IST   |   Update On 2025-02-05 14:17:00 IST
  • திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பொருட்கள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
  • விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிய வந்துள்ளது.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கரட்டழகன்பட்டியில் பந்தல் அலங்கார பொருட்கள் குடோன் வைத்துள்ளார். இங்கு திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பொருட்கள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.

இன்று அதிகாலை அந்த கடையில் இருந்து திடீரென புகை மூட்டம் வந்தது. பின்னர் புகை அதிகரித்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் தலைமையில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குடோனில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து கருகியது.

இது குறித்து அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிய வந்துள்ளது.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு பரவுவது தவிர்க்கப்பட்டதுடன் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

Tags:    

Similar News