கடன் பிரச்சனையில் 2½ ஏக்கர் மக்காச்சோளப்பயிரை டிராக்டர் விட்டு அழித்த அவலம்- போலீசில் விவசாயி பரபரப்பு புகார்
- 2½ ஏக்கர் விவசாய பூமியை பவர் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார்.
- மகாலிங்கம் அடியாட்களுடன் வந்து, டிராக்டர்கள் மூலம் மக்காச்சோளப்பயிர்களை அழித்து நாசம் செய்து விட்டார்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வஞ்சிபுரம் செக்கான்தோட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43) , விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள 2½ ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார்.
இந்தநிலையில் தாந்தோணியைச் சேர்ந்த மகாலிங்கம் (43) உள்ளிட்ட சிலர் 2 டிராக்டர்கள் மூலம் குமார் பயிரிட்டிருந்த 20 நாட்கள் வயதான மக்காச்சோளப் பயிர்களை அழித்து நாசம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி குமார் கூறியதாவது:-
கடந்த 2009 -ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக தாந்தோணியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் ரூ.80 ஆயிரம் கடன் பெற்றேன். அதற்காக 2½ ஏக்கர் விவசாய பூமியை பவர் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார். ஆனால் நாங்கள் அந்த பூமியில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். அதேநேரத்தில் இந்த நிலத்தை மகாலிங்கம் தனது மனைவி பெயரில் கிரையம் செய்து கொண்டார். அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மகாலிங்கம் அடியாட்களுடன் வந்து, டிராக்டர்கள் மூலம் மக்காச்சோளப்பயிர்களை அழித்து நாசம் செய்து விட்டார். அதனை தடுக்க முயற்சி செய்த என்னையும் என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அருகிலுள்ள தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து கிணற்றில் வீசி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கணியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்காச்சோளப்பயிர்களை அழிக்க பயன்படுத்திய டிராக்டர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கடன் பிரச்சனை தகராறில் மக்காச்சோளப் பயிர்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.