வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டசபை தேர்தல் இருக்கும்: எடப்பாடி பழனிசாமி
- தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பலவற்றை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
- 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வானூர் அருகே திருச்சிற்றம்பலம் 4 முனை சந்திப்பில் பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.
கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்பதாக ஸ்டாலின் ஏமாற்றினர். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படாதால் மாணவர்கள் உயிர்நீத்தது தான் மிச்சம்.
பொய் பேசி ஓட்டு பெற்று ஏமாற்றும் கட்சி தி.மு.க. கட்சியிலும், ஆட்சியிலும் தி.மு.க. குடும்பத்தில் இருப்பவர்தான் பொறுப்புக்கு வர முடியும். தி.மு.க.வில் நடப்பது மன்னர் ஆட்சியா? குடும்பத்தில் இருப்பவர்தான் வர வேண்டுமா? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக சட்டசபை தேர்தல் இருக்கும்.
விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஓடோடி வந்து பார்த்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை
அ.தி.மு.க. கொடுத்த அழுத்தத்தால் ஆட்சிக்கு வந்து 25 மாதத்துக்கு பிறகுதான் மகளிர் உரிமைத்தொகை வழங்கினார்கள். தேர்தல் வரை மட்டுமே மகளிர் உரிமைத்தொகையை தருவார்கள்.
தி.மு.க.வின் ரூ.1,000 உரிமைத்தொகையை நம்பி நாங்கள் தரவிருந்த ரூ.1,500-ஐ தவறவிட்டீர்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தியாவிலேயே கல்விக்கு முக்கியத்துவம் தந்தது அ.தி.மு.க.தான். கல்விக்கு முக்கியத்துவம் தராதது தி.மு.க. என தெரிவித்தார்.