த.வெ.க. கொடியில் யானை சின்னம்: இடைக்கால மனுவை திரும்பப் பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி
- விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பிடித்ததற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு.
- இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானையாகும். அக்கட்சியின் கொடியில் யானை சின்னம் உள்ளது. தமிழகத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். த.வெ.க. கட்சியின் கொடியில் இரண்டு யானைகள் உள்ளது. த.வெ.க. கொடியில் யானை இடம் பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கில், இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தனது இடைக்கால மனுவை பகுஜன் சமாஜ் கட்சி திரும்பப் பெற்றது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக அக்கட்சி தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருவேளை கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால், அது புதிதாக கட்சி தொடங்கியுள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு சாதகமாகும் என்பதால் பகுஜன் சமாஜ் கட்சி இம்முடிவை எடுத்துள்ளது. பிரதான வழக்கில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கையும் சேர்க்க மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ஆனந்தன் தெரிவித்துள்ளார்.