ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் ஆய்வு செய்யாமல் இருக்க சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்ததா? - E.D. ரெய்டு
- மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது.
- ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
மத்தியபிரதேச மாநிலத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்த 24 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் ராஜஸ்தானிலும் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை காஞ்சீபுரம் மாவட்டம் சுங்கு வார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த இருமல் மருந்தை தயாரித்த போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கான 'புரோப்பிலின் கிளைக்கால்' பயன்படுத்தியதால், 'டை எத்திலீன் கிளைக்கால்' அளவு மிகவும் அதிகரித்து அந்த குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருந்து நிறுவன உரிமையாளரான சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 75) கைது செய்யப்பட்டார். ஸ்ரீசன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
23 குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து தமிழகம், கேரளா, மத்தியபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த இருமல் மருந்து நிறுவனத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் 2011-ம் ஆண்டு உரிமம் வழங்கியது. அதன்பிறகு இந்த நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக தமிழக அரசு அதிகாரிகள் சரியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து நிறுவன விவகாரத்தை தற்போது அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் முறையாக ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு சட்ட விரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குனர் தீபாவின் வீடு சென்னை திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ளது. அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு இணை இயக்குனராக பணிபுரியும் கார்த்திகேயன் வீடு சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ளது. இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை 7.15 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
கார்த்திகேயன் வீட்டில் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். கார்த்திகேயன் தனது அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சப்பணம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் அப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜுனா நகர் 2-வது தெருவில் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
தனது மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரங்கநாதன் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து இருக்கிறாரா என்பதை அறிய அவரது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள்.
அதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டால், யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்து அந்த அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறார்களா? அப்படி ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் யார்? அவர்கள் முறையாக ஆய்வு செய்தார்களா அல்லது பெயரளவுக்கு நடத்தினார்களா என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.