அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் ED சோதனை
- சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை.
சென்னை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐ.பெரியசாமி தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் ஏற்கனவே கூட்டுறவு துறை, வருவாய் துறை பொறுப்புகளையும் அமைச்சரவையில் வகித்து உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள ஐ.பெரியசாமியின் வீட்டுக்கு இன்று காலையில் 3 கார்களில் சென்ற 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐ.பெரியசாமியிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ள வந்திருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் சோதனையை தொடங்கிய பிறகு வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஐ.பெரியசாமியின் வீட்டில் இருந்தும் யாரையும் வெளியே செல்வதற்கும் அனுமதிக்கவில்லை.
ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில் குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வரும் ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் சீலப்பாடியில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவரது வீட்டுக்கும் இன்று காலையில் சென்ற அதிகாரிகள் தீவிர சோத னையில் ஈடுபட்டனர். ஐ.பெரியசாமியின் மகள் பெயர் கவிதா. இவர் திருமணமாகி திண்டுக்கல் கோவிந்தாபுரம் வள்ளலார் நகரில் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வத்தலக்குண்டில் உள்ள ஐ.பெரியசாமிக்கு சொந்தமான அரிசி ஆலையிலும் சோதனை நடந்தது.
சென்னையில் 2 இடங்கள் மற்றும் திண்டுக்கல்லில் 4 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதையொட்டி சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் வீட்டில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
இதையடுத்து வீட்டு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. ஐ.பெரியசாமி வீட்டு முன்பு திரண்ட தி.மு.க.வினர் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
கடந்த 2008-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அதே நேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. சட்ட விரோதமாக பணபரிமாற்றங்களை மேற்கொண்டு அதன் மூலமே ஐ.பெரியசாமி சொத்துக்களை குவித்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
தி.மு.க. அமைச்சர்கள் பலரது வீடுகளில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நடத்தி வரும் சோதனை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.