முதலமைச்சர் வருகையையொட்டி திருப்பத்தூரில் 25, 26-ந்தேதி ட்ரோன்கள் பறக்க தடை
- கலெக்டர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
- 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார். அன்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து 26-ந்தேதி காலை 9 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 25, 26 ஆகிய 2 நாட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.