தமிழ்நாடு செய்திகள்

ED சோதனை- அமைச்சர் ஐ.பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ. வீடுகள் முன்பு குவிந்த தி.மு.க. தொண்டர்கள்

Published On 2025-08-16 12:45 IST   |   Update On 2025-08-16 12:45:00 IST
  • ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
  • சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் தி.மு.க.வில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இவரது வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று காலை 3 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் சோதனைக்கு வந்தனர். அப்போது வீட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி இருந்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தெரிவித்து விட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சீலப்பாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா தனது கணவர் துவாரகநாதன் மற்றும் குழந்தைகளுடன் கோவிந்தாபுரம் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமாக ஆத்தூர் தொகுதி சிங்காரக்கோட்டையில் ஏற்றுமதி தரம் கொண்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளை அவரது மருமகன் துவாரகநாதன் கவனித்து வருகிறார். தற்போது அந்த ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் நிறுத்தப்பட்டனர். சோதனை குறித்து அறிந்ததும் அமைச்சர் ஐ.பெரியசாமி, செந்தில்குமார் வீடுகள் முன்பு ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது ஏற்கனவே வீட்டு வசதி துறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளருக்கு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுதலை பெற்ற நிலையில் மீண்டும் அந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே தற்போது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து முதல் முறையாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News