தமிழ்நாடு செய்திகள்

'டிட்வா' புயல்... கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2025-11-28 14:01 IST   |   Update On 2025-11-28 14:01:00 IST
  • டிட்வா’ புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவு.

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

மேலும், தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அரக்கோணத்தில் இருந்து 34 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் குழுவினர் 60 பேர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 127 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 'டிட்வா' புயல் காரணமாக மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News