கொட்டும் மழையில் மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் பனகல் கட்டிடம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கருப்புப்பட்டை அணிந்து கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மோசஸ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமை மற்றும் வேலைவாய்ப்புகளை பறிக்கும் அரசாணை எண் 24-ஐ ரத்து செய்துவிட்டு உடனடியாக அரசாணை எண் 20-ஐ அமல்படுத்த வேண்டும்.
சிறப்பு ஆள்சேர்ப்பு நடத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது அவர்கள், தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்த இடைவிடாத கனமழையையும் பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.